புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்குஒத்தன்று மன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதற் சிதறிய வைபோல், யானைப்
புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோற் பாறை வரிப்பக், 5
கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர்உயிர்த் துப்பின் கோள்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10
அருளான் - வாழி தோழி!- அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோற்,
காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள் 15
அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்
மைஆடு சென்னிய மலைகிழ வோனே!

Add a comment

பல்இதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்நரம்புஇசைத் தன்ன இன்தீம் கிளவி,
நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே-
கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடுகால் யாத்த நீடுமரச் சோலை 5
விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை;
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், 10
கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர் விட்டுஅகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பலவிலங் கினவே

Add a comment

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள் 10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் மலைஇறந் தோரோ!

Add a comment

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே; கானல் 5
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல் லீரோ! 10
எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி, 15
'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்; இழுமென
'நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும் 20
என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே!

Add a comment

அம்ம வாழி தோழி! இம்மைநன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework