- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னெனஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக் 10
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்-
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்துஇன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என,
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன் - வாழி, தோழி ! கால் விரிபு 5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும் 10
பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
மணிஓர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
நோகோ யானே; நோதகும் உள்ளம்;அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
வெம்புமன், அளியள் தானே - இனியே,
வன்க ணாளன் மார்புஉற வளஇ, 5
இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு,
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப் 10
பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே- எல்லி
ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித் 15
தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்துகுன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் 5
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், 10
இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே-
வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி 15
சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி-
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், 20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
துஞ்சுவது போலஇருளி விண்பகஇமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு
ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு,
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்; 5
ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை
வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப்
புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத்,
தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து
வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை; 10
வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ; 15
இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்!
யாதுகொல் மற்றுவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர்: 'வருதும்' என்றதுவே