அம்ம வாழி தோழி ! கைம்மிகக்கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி 5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 15
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது: 20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை 25
நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework