அன்னை அறியினும் அறிக; அலர்வாய்அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே; கானல் 5
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல் லீரோ! 10
எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி, 15
'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்; இழுமென
'நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும் 20
என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework