அம்ம வாழி தோழி! இம்மைநன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework