கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்அந்திப் பராஅய புதுப்புனல், நெருநை,
மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ, 5
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்துஎழில் மழைக்கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகிக்,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண்இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
யாழ்இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய்வாள் எவ்வி ஏவன் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனிஅஃது 15
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலிசிறந்து எடுத்த
கறங்குஇசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு உற்ற சூளே!

Add a comment

நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்புகலந்து,அறாஅ வஞ்சினம் செய்தோர், வினைபுரிந்து
திறம்வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினைபாய்ந்து.
உதிர்த்த கோடை, உட்குவரு கடத்திடை, 5
வெருக்குஅடி அன்ன குவிமுகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான்பூ
மயிர்க்கால் எண்கின் ஈர்இனம் கவர,
மைபட் டன்ன மாமுக முசுவினம்
பைதுஅறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென 10
வெதிர்படு வெண்ணெல் வெவ்அறைத் தாஅய்,
உகிர்நெறி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர்
தாம்பழி உடையர் அல்லர்; நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்குவினை 15
வால்ஏர் எல்வளை நெகிழ்த்த,
தோளே!- தோழி - தவறுஉடை யவ்வே!

Add a comment

இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இனமீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படுதிரை 5
பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயும்
கானல் பெருந்துறை நோக்கி, இவளே,
கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நல்தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
அம்மா மேனி தொல்நலம் தொலைய, 10
துஞ்சாக் கண்ணள் அலமரும், நீயே,
கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
நும்ஊர் உள்ளுவை; நோகோ, யானே

Add a comment

அறியாய்- வாழி தோழி!- பொறியரிப்பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மாமலை நாடனொடு மறுஇன்று ஆகிய 5
காமம் கலந்த காதல் உண்டெனின்,
நன்றுமன்; அதுநீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத் தானே-
இன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது, 10
முளைஅணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச்,
செய்துபின் இரங்கா வினையொடு
மெய்அல் பெரும்பழி எய்தினென் யானே!

Add a comment

தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது
செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார், 5
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் 10
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல் 15
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்,
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும் 20
பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போதுவாய் அவிழ்ந்த
ஒண்செங் கழுநீர் அன்ன நின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework