மண்டிலம் மழுக மலைநிறம் கிளர,வண்டினம் மலர்பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்பக்,
கரைஆடு அலவன் அளைவயின் செறியத்,
திரைபாடு அவியத், திமில் தொழில் மறப்பச், 5
செக்கர் தோன்றத், துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக்,
கழிமலர் கமழ்முகம் கரப்பப், பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்நிறம் கொளாஅ,
எல்லை பைப்பய கழிப்பி எல்உற, 10
யாங்குஆ குவள்கொல்? யானே நீங்காது,
முதுமரத்து உறையும், முரவுவாய் முதுபுள்
கதுமெனக் குழறும், கழுதுவழங்கு, அரைநாள்,
நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த
அன்பி லாளன் அறிவுநயந் தேனே

Add a comment

வேனிற் பாதிரிக் கூனி மாமலர்நறைவாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரிஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர்ஆறு படீஇயர், யாழநின்
பொம்மல் ஓதி பொதுள வாரி 5
அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்; அணிகொள
நுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை 10
மெல்இறைப் பணைத்தோள் விளங்க வீசி,
வல்லுவை மன்னால் நடையே- கள்வர்
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்,
மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து.
நார்அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக், 15
களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன்கோட்டு
அரிலிவர் புற்றத்து அல்குஇரை நசைஇ,
வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயி னானே

Add a comment

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்துவாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி,
வெண்கோடு புய்க்கும் தண்கமழ் சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தித் 5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனிவார் கண்ணேன் ஆகி, நோய்அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
பாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஈங்கைத்
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித் 10
தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையம் துயில்மறந் தனளே!

Add a comment

தூதும் சென்றன; தோளும் செற்றும்;ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;
வீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 5
தங்கலர்- வாழி, தோழி!- வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,
இன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,
தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர் 10
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை 15
வாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி
மாநிலம் நெளியக் குத்திப், புகலொடு
காப்புஇல வைகும் தேக்கமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி-
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே

Add a comment

வைகல் தோறும் பசலை பாய என்மெய்யும் பெரும்பிறிது ஆகின்று; ஒய்யென,
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி,
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் 5
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்குயான்
சிலநாள் உய்யலென் போன்ம்' எனப் பலநினைந்து
ஆழல்- வாழி, தோழி!- வடாஅது,
ஆர்இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப் 10
பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர்அறிந்து,
இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
தழூஉப்பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம்தூம்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த 15
துறுகாழ் வல்சியர் தொழுஅறை வௌவி,
கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்,
பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனர் ஆயினும், மயர்இறந்து 5
உள்ளுப தில்ல தாமே- பணைத்தோள்,
குரும்பை மென்முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்புஅழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து,
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework