- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.
நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவு நிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.
மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர் தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன்முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வார்.
நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதை துலாக்கோலை – நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும். நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக்கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.
அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும் – பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.
நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தை காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விலையும்; நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்துவிட்டதாக உணர்வர். இது வரவேற்கத்தக்கதல்ல.
ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்வது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" (திருக்குறள் – 118)
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.
இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர்களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம். உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.
துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.
மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. 'உண்டி முதற்றே உலகு' என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை "உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்" என்றார் அண்ணல் காந்தியடிகள்.
நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.
"A 'm the sweet of the fere shalt than cat Bread" என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.
"Nothing is free" என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு – படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! – நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.
"தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்" (திருக்குறள் – 1065)
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
இன்று "மானுடம்" உலகமகா உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம். சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகலைக் கடந்து மானுடம் "ஓருலகம்" என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.
மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.
இங்கனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள் – அடிமை முறை தோன்றியது.
இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.
தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.
இங்ஙனம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டுமல்ல, மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.
மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செயத வரலாற்றை ஓர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.
பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை. மதம் இல்லை. உடைமை இல்லை, தொழில் இல்லை. பெருமை இல்லை. சிறுமை இல்லை. வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக் கூடாது.
சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" (திருக்குறள் – 972) என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.
பிறப்பின் அடிப்படையில் தொழில் இல்லை. தொழிலால் ஏற்படும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும், சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.
சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி அப்படி இருந்தால்தான் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்களையும் சிய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரி பெறுவதை – அடைவதை "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.
பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.
திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.
ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (திருக்குறள் – 314) என்பது குறள்.
பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.
ஆதலால் திருவள்ளுவர் "இன்னா செய்தாரை ஒறுத்தல்" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.
இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? "தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!" என்று வள்ளுவர் கூறுகின்றார்.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல்" – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். "அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது" பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.
"எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்". இது எளிய வாழ்வியல் உண்மை.
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும், பகுதி தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?
கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற் பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தை – தன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக்க குறைவு! ஆயுளும் அற்பமே!
மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல் குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம் மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது. ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.
ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும் போது யாரும் துணுக்குறுவதில்லை. கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.
ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஓடுகின்றன. நொடிதோறும் வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வந்துவிடுகிறது.
ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தலாம். புகழ்பட வாழலாம். ஆனால் உளவியல் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப்படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!
"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்" (திருக்குறள் – 334)