வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம், அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரை பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர்காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.

இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தரவேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட. மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற"

என்பது திருக்குறள். ‘அறிவறிந்த’ என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள் உரையாசிரியர்கள். அறிவு, கல்வி கேள்விகளாலும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலும் தோன்றுவது. ஆதலால் மக்கள் பிறந்து வளர்ந்த பிறகுதான் அறிவறிந்த மக்களாதல் இயலும். ஆதலால் அறிவறிந்த என்ற சொல்லை மக்களின் பெற்றோர்கள் பால் சேர்த்துக் கூறுவதே பொருத்தம். ஆம்! பெற்றோர்கள் காதல் மனையற வாழ்க்கையை அறிவறிந்த நிலையில் நடத்துதல் வேண்டும். காமக்களியாட்டமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அறிவார்ந்த நிலையில் அன்பும் அறமும் கலந்த ஊனை, உயிரை, உணர்வினைக் கடந்த நிலையில் கூடுதல் நிகழுமாயின் அறிவறிந்த மக்கள் தோன்றுவர்.

பிறப்பில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் போலவே வளர்ப்பிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக நமது நாட்டில் கிராமப் புறங்களில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள். அதனால்தான் நமது சமுதாயத்தில் தரம் குறைந்திருக்கிறது. குடும்பம் மனையறத்தில் சிறந்து விளங்கினால் அக்குடும்பம் மனிதகுல வரலாற்றிலேயே இடம்பெறும். ஒருவர் தமது முன்னோரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் வளர்ச்சியின்மையைக் குறிப்பதாகும். மாறாகத் தனக்குத்தானே அறிமுகமாக விளங்கி வாழ்பவர்கள், தமது குடும்பத்திற்கும் விளக்கம் தருகிறார்கள். இவரைப் பெறுவதற்கு இவருடைய தந்தையும், தாயும் என்ன தவம் செய்தனரோ என்று வியக்கும் அளவுக்கு வாழக்கூடிய தகுதி, திறன்களுடன் மகவை வளர்க்க வேண்டும். நல்ல தாய், நல்ல தந்தை என்று பெயர் விளங்க வாழ்தலே சிறப்புற அமைந்த மனையற வாழ்க்கை.

"மகன்தந்தைக்கு ஆற்றும் இதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லேனுஞ் சொல்"

Add a comment

அன்பு – இஃது ஓர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு; தீமையைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

உயிர்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஓடிப்போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது: ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.

அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிட மாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.

கதிரொளியில் – வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோல சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடதிற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். "ஆற்றலுடமையே வாழும்" என்பது உண்மை.

ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்"

Add a comment

மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூகிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙனம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

விருந்தினர் என்பவர்கள் புதியவர்கள். அதாவது முன்பின் தெரியாதவர்கள். அதாவது நாடுவிட்டு நாடு, கற்பதற்காகவும் புதிய அனுபவங்களைப் பெருதலுக்காகவும் பயணம் செய்து வருபவர்களே விருந்தினர் (இன்று உறவினர்களை விருந்தினர் என்று அழைப்பது தவறான மரபு). இத்தகு விருந்தினர்களை, உழுவலன்புடையாரைப் போல இனிய பரிவு நிறைந்த புன்முறுவல் தாங்கிய முகத்துடன் வரவேற்க வேண்டும். அங்ஙனம் வரவேற்காது, அந்நியர் என்ற உணர்வுடன் முகத்தில் ஐயப்பாட்டுணர்வும் விருப்பமின்மையும் புலப்பட நோக்கின், வந்த விருந்தினர் மனத்துன்பம் அடைவர்; அவர்கள் சோற்றுக்காக வந்தவர்கள் அல்லர்; உறவுக்காக வந்தவர்கள். நன்மை செய்வதற்காக வந்தவர்கள்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து"

Add a comment

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றதிற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை – நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருகிறது. அழிந்துமிருக்கிறது.

இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன்வருவார். நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர் அந்த நன்மையை மறவாதிருத்தலே அவர் அந்த நன்மையின் – தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.

ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவார். அதனால் "நன்றி மறப்பது நன்றன்று" என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.

நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே! இந்த உலகில் நல்லவர்கள் – நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார் மீது காழ்ப்புணர்ச்சி கால்கொள்ளும் – அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால்

"நன்றல்லது அன்றே மறப்பது நன்று"

என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி! "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று." இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உள இயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும். அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

Add a comment

நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது. மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு ஆய்வு செய்தல் – அணுகுதல் ஆகாது.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பை தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி – அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும்.

இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும். முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று – அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில் அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் முறை. அதுபோலவேதான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப் பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி." (குறள் – 118)

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework