‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்பட்டதால் நேர்ந்தவைகளாகும்’ என்றார் – எஸ். கே. டே. "கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை" என்றார் மாமேதை லெனின்.

கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது. கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ – மேற்பார்வையா, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகுமுறைகள் கூட்டுறவை பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் பயிற்ருவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் – தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை – கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

மக்களும் கூட்டுறவைத் தங்களுடையதாகவும் பொதுநலத்திற்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்." (திருக்குறள் – 214)

Add a comment

நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில் சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை செயல் திறன் கைகூடும்! அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

அங்ஙனமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வங்கி வாழும் இரத்தல் வாழ்வு வளராது. தன்னம்பிகையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றி, சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், இரத்தலும் நல்லதே என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" (திருக்குறள் – 222)

Add a comment

மானுடம் உறவுகளால் ஆயது; உறவுகளால் வளர்வது, உறவுகளுக்காகவே மானுடம் அமைந்தது. சமூக அமைப்பு மானுடத்தினிடையில் வளரும் – உறவுகளால் அமைந்தது; வளர்ந்து இயங்குவது; வாழ்வது.

உறவுக்கு எதிரான பகை, தீயது; பகை தீயது; "யாரொடும் பகை கொள்ளற்க" என்பது இராம காதை தரும் அறிவுரை. உறவு முறிந்து பகை வளர வாயில்கள் பல உண்டு. சொத்துரிமையின் காரணமாக உறவுகள் முறியக்கூடும். இஃது அருகிய வழக்கே!

நம்பிக்கையின்மை காரணமாக உறவுகள் முறியும். இந்த வகையில் பிரிவும் பெரும்பான்மையல்ல. ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் உறவு, பகையாக மாறுவது மூன்றாவது மனிதரின் தலையீடு. அதுவும் கோள் சொல்லுதல் மூலம் தலையீடு.

கைகேயி உத்தமத்தாய். ஆனால், கூனியின் தலையீட்டால் அந்தத் தூய அன்பு திரிந்தது. அதனால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது நமக்கு ஆயிரம் நலம் பயக்கும் செய்திகளை முன்னுரையாகக் கூறி, உடன் அந்த மூன்றாம் மனிதரைப் பற்றிச் சொல்லும் செய்திகளைக் கேளற்க! ஒரோவழி கேட்டாலும் பொருளாகக் கொள்ளற்க.

காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்து விடுவர். நமக்கு நன்மை போலச் சொல்வர். நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரீகம் என்பர். ஆன்றோர், சான்றோர் நெறி என்பர். அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்; விழிப்பாக இருக்க வேண்டும்.

மற்றவர்களைப் பற்றி ஒருவரிடம் பேசாதே; எதுவும் கூறாதே; கோள் சொல்லுதலும் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

கோள் தற்சார்பு இனிப்பு மூடிய கொடிய நஞ்சு. இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும் கோள் வாயிலாக அந்த நன்மை வளரவேண்டாம்.

கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேள். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க; வளர்த்துக்கொள்க; வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

Add a comment

இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான். ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல்தான்!

இங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கைத் துன்பச் சுமையாகத் தோன்றும். "ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை" என்றார் எலியட்.

ஒருவர் நம்மை நாடி வந்து கேட்ட பிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், "நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்" என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.

உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது; பலர் சுற்றமாகச் சூழ்வர்.

இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, காலத்தில் இடர்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.

மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது. மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது; பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குலநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.

பசியைப் பொறுத்தலினும் – மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். (திருக்குறள் – 225)

Add a comment

சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. "சத்" என்ற சொல்லுக்குப் பொருள் "உள்ளது" என்பது. உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincerely) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது, கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

எனவேதான் "சத்தியமே கடவுள்" என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செலவழித்தார்.

உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙனம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை. மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், "நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்" என்று கூறுவதை அறிக.

ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் "வாய்மை" என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.
வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

ஒருவர் பிறிதொருவரைபற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்" (திருக்குறள் – 291) என்று கூறுகிறது.

வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளிய வேண்டும். செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல. ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களையே கூறுக.

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework