வெஃகல் – பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், அதாவது தனக்கு உரியன அல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழி நிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்றபாடில்லை ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமன்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான். ஆற்றலை இழக்கின்றான். காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்துவதும் செய்வர். ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பமும் பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும். பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன. அறிவு, ஆற்றல்கள் வளர்க்கின்றன. சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல் – உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும். அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்" (குறள் – 171)

Add a comment

புறங் கூறல் – அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல், அப்புறம் அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர். ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீய பழக்கம்.

சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை. "எரியும் நெருப்பு கனலே வீசுகிறது" என்று ஒரு பழமொழி உண்டு, நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம் – அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். "குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்" என்று திருமுறை கூறும்.

ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையையும் இல்லை. தீமை மட்டுமே தரும்.

குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப்போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக்கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் ‘புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்படும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர் இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். (குறள் – 185)

Add a comment

இந்த உலக படைப்புகள் எல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் "சொல்" தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத்தரும்.

பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்' என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. "வறுமொழியாளர்" என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. "வெற்றெனத் தொடுத்தல்" என்று இலக்கணம் கூறும்.

தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூறாமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக "பயனில் சொல்லாமை" என்று தனியே விரித்தும் கூறியது. பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதேயாகும்.

வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது "அரும் பயன்" ஆகும்.

அற்ப மகிழ்ச்சி; சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அறிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

"அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்." (திருக்குறள் 198)

Add a comment

நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், தூற்றுதல் முதலியன.

இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரோடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் தூற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

தீயைவிடத் தீமை கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும் தீ, ஒரோ வழி பயன்படும். தீமை பயன்படாது; அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைத் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (திருக்குறள் 202)

Add a comment

சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.

தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

ஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் "ஊருணி" என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் "ஊருணி" என்று புகழ் பெற்றது.

பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.

இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

"உலகன் உண்ண உண்! உடுத்த உடுத்து!" என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework