அறிக அறிவியலை! விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெருக! "அறிவு" என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும்.

அறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.

ஒன்றிலிருந்து பிரிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது. இந்த உலகம் எப்படி இயங்குகிறது?

என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல். நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல். நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல்.

அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை. உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை.

"ஆன்மிகம்" என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு. ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும். உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்துள்ளது. வளர்ந்துகொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும். ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வளராமல் தேக்கம் கண்டுவிட்டது. ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி "மதம்" என்ற அமைப்புக்குள் சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது. கடைசியாக ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ். "ஆன்மா" "ஜீவன்" என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார்

என்பது உண்மையானாலும் "ஆன்மா"வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.

ஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆன்மா என்பது என்ன? ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா? அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா? ஆன்மா தோற்றமும் அழிவுமுடையதா? ஆன்மா, அறிவுப்பொருளா? அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா? ஆன்மாவின் இலட்சியம்தான் என்ன?

ஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் — இன்பமும் — துன்பமும் குறிக்கிடுவது எப்படி? எதனால்? ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒருவகையான அறிவியலே ஆன்மவியல்.

அறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன! அறியத்தக்கன!
அருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள்! அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.

Add a comment

உலகியலை எண்ணிப் பார்க்கையில் எல்லாமே முதன்மையுடையவனாகவே தெரியும். அதாவது நாடு, மொழி, சமயம், கலை, பொருள் ஆகியன. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமையும் நாடு மிகமிக இன்றியமையாதது. எல்லா விழுமிய பற்றுக்களிலும் மிகவும் விழுப்பம் உடையது நாட்டுப் பற்றேயாம். விழுப்பம் தரும் நாட்டுப்பற்றிலும் மிக்குயர்ந்தது நாட்டு எல்லைகளைக் கடந்த உலகந்தழீயிய விருப்பம். நாட்டுப்பற்றோடு இணைந்தது, பிணைந்தது நாட்டில் வாழும் மக்களிடத்தே நிலவ வேண்டிய ஒருமைப்பாடு.

ஒரு நாட்டின் மக்கள் ஒருமைப்பாடுடையவர்காளாயில்லாது போனால் அந்த நாடு சிந்தையில் ஒன்றாக விளங்கும் நாடாக உருப்பெறுதல் அரிது. நாட்டு மக்களிடத்தில் நல்ல வண்ணம் கலந்து பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும், உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.

இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணை செய்தல் நல்லது.

ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய்மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.

அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்புமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.

Add a comment

குழந்தைகள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். நாளைய நாடு இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கப் போகிறது. மனிதர்கள் வருவார்கள் — போவார்கள்! ஆனால், நாடு என்றும் இருக்கும். ஆதலால் நாட்டின் நிலையான தன்மையை நினைவிற்கொண்டு எதிர்வரம் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும். நமது நாட்டின் நேற்றைய தலைமுறை, அதாவது நமக்கு முந்திய தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறை.

இன்றைய தலைமுறையினராகிய நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதேபோழ்து, நாம் மற்றவர்கள் சுதந்திரத்தில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். கையூட்டு, வரதட்சணை, முறை பிறழ்ந்த குடியாட்சி முறைகள் மற்றவர்களுடைய சுதந்திரதிற்கு கேடு விளைவிப்பதுதானே! ஆனாலும், நாம் எதிர்வரும் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும்.

கிராமம் தோறும் முன்கல்விப் பள்ளி (Primary Schools) தொடங்கப் பெற வேண்டும். இந்தப் பள்ளி மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகளுக்குரியது. இந்தப் பள்ளியில் பயில ஏடுகள் வேண்டாம். கரும்பலகைகள் வேண்டாம். கூடவும் கூடாது. காணல், கேட்டல், சொல்லுதல் ஆகியனவே பயிற்சி. இந்தப் பருவத்தில் உற்றுக் காணல், கவனமாகக் கேட்டல், ஆர்வமுடையன சொல்லுதல் ஆகிய பயிற்சிகள் விளையாட்டுகளுடனும் இசையுடனும் சொல்லித்தரப் பெறுதல் வேண்டும்.

குழந்தைகளுக்கு பாரம்பரியமும் சூழ்நிலையும் சீராக அமைந்தால் சிறப்பாக வளர்வார்கள். இன்றைய கிராமக் குழந்தைகளுக்கு இவை இரண்டுமே பாராட்டத்தக்க வகையில் அமையாதது ஒரு பெருங்குறை. இன்றைய அறங்களில் தலைசிறந்தது — இன்றைய நாட்டுப் பணிகளில் சிறந்தது இன்றைய குழந்தைகள் நன்றாக வளர்வதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தருவதேயாம். இந்தப் பணியைச் செய்வதில் பெற்றோர்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிறைய பொறுப்புண்டு.

குழந்தைகள் வளர்ச்சி நிலைப்பருவம் 18 மாதம் முதல் 13 வயது வரை ஆகும். இந்த வயதுக் காலத்தில் குழந்தைகள் பாலர் பள்ளி, ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். பல சிற்றூர்களில் பாலர் பள்ளிகள் இல்லை. இருக்கும் இடங்களில் தக்க ஆசிரியர்கள் இல்லை. இன்றைய ஆரம்ப பாடசாலைகளின் நிலை…..எழுதக் கை நடுங்குகிறது! அவ்வளவு மோசமான நிலை!

இன்றைய ஆரம்பக் கல்வி குழந்தைகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இல்லை. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிலும் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியை உணர்ந்து செயற்படுவோர் சிலரே! எல்லாவற்றையும்விட இந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் திருத்தமுறுதல் நல்லது. காரணம், இந்தக் குழந்தைகள் தாம் காண்பனவற்றைத் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றன.

நவம்பர் 14 குழந்தைகள் தினவிழா, குழந்தைகள் நலனுக்குரியான செய்வோம்! முறையாக வளர்ப்போம்! சீராக வளர வாய்ப்பளிப்போம்! இன்றைய குழந்தைகளின் — நாளைய தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் முறையாக வளர்ப்பது நமது கடமை! நீங்காக் கடமை.

Add a comment

கடவுள் எல்லையற்ற பொருள்; ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். தண்ணீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால், திருவள்ளுவர் "நீரின்றியமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத – நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல, பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" – என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புள் அல்ல, முளைத்தெழும் புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மைனர் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மணற்பரப்பு ஆழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

"விசும்பின் துளிவீழின் அல்லாமற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது"

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம். இளங்கோவடிகளும்

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுது" என்று வாழ்த்தினார்.

Add a comment

மனம்-மொழி-மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவாருக்கே புலப்படும்;அங்கனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.

பற்றுக்களின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளேயாம். இயல்பாக உயிரினம் – குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக்கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

இன்று மனிதன் களிப்பை – அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு. ஊக்கம் உண்டு. இந்த ஓட்பம் – அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால்கொள்கின்றன.கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை. ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்கு காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை – கோட்பாடு. உலகத்தை –இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்துகொண்டு அந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவருக்கு – இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"

என்பது திருக்குறள்.

மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு – அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள் – என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.

இன்று பெரும்பாலும் – புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோலவெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள் – வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிபடுத்தும் இயல்பு – புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.

புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை – ஒளி – ஊறு – ஓசை – நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வான கொள்வர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பௌதிகம் அறிந்து – அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகையாரே நீத்தார்!

புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையவனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்"

"அவித்தல்" என்றால் அழித்தல் – அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் – பக்குவப் படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப் போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

பற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை – வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்க முடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்போழுதும் – நீத்தார் தன்மை வந்தமைகிறது.

இத்தகு நீத்தார்க்குத் தற்சா ர்பின்மையால் விருப்பு வெறுப்புகள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை! சார்பு இல்லையேல் நன்மையையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework