இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும்கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனதிற்கு மாசு இயற்கையன்று. மனதிற்கு மாசு கொள்முதலேயாம்.

நமது பொறிகள் – மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள் – ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா!

ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையான. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தணியராசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வழக்கை.

எந்த ஒரு நன்மைக்கும் களம் தூய்மையாக வேண்டும் அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத்தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி. அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லோரும் வாழ்தல் – நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையான என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறிச் சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

Add a comment


திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை, பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional thinking – Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லோரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் "ஊழிய"லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்ததிக்கின்றார்; ஆழமாகச் சிந்ததிக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத்தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப் போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு! செங்கோன்மையைத் தேடிப் போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய்"

"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்படும் கீழ்"

என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால் செய்ய முற்பட்டது! இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும் திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப்பாலில் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்"

என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

Add a comment

வாழ்தல், அறிவியல் சார்ந்த கலை, உளவியல், சமூகவியல், தாவரவியல், வேளாண்மையியல், கால்நடையியல், கட்டுமானவியல், தொழிலியல், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய அறிவியல் துறைகள் அனைத்தும் சங்கமித்த தனிச்சிறப்புடைய வாழ்க்கையே வாழ்க்கை! மானிட வாழ்வியல், விலங்குத் தன்மையுடையதல்ல.

மனிதன், மிருகமும் அல்ல; மனிதனும் அல்ல. விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை அடையக்கூடிய படைப்பு! மனிதனாகிய பிறகு, அதிமானுடத் தன்மை அதாவது இறைத்தன்மை அடைய வேண்டிய படைப்பு! இந்தப் பரிணாம வளர்ச்சி, முறையாக நிகழ்ந்து நிறைவெய்துதலே வாழ்கையின் குறிக்கோள்; பயன்! இத்தகு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழாத வாழ்க்கை, வாழ்க்கையாகாது. "வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே!" என்பது திருவாசகம்.

வாழ்க்கை என்பது தற்செயலாக ஏற்பட்டதல்ல. வாழ்வியல் திட்டமிட்டதே! அற்புதமான ஒழுங்கமைவுகளுடன் அமைந்ததேயாம். ஆதலால், சிறந்த முறையில் வாழ முயற்சி செய்வதும் ஒருவகை அறிவியல் முயற்சியேயாகும். ஏன்? சீராக வாழ்ந்து – வாழ்ந்த காலத்திற்கும் தலைமுறைக்கும் ஏற்றம் தரும் வகையில் வாழ்ந்து முடித்தால் அஃது ஓர் அறிவியற்சாதனை என்று கூட பாராட்டலாம்.

வாழ்க்கையென்பது பல்வேறு பொறிகளைக் கொண்ட, புலன்களால் அமைந்த உடலைக் கருவியாக்கிக் கொண்டு வாழப்பெறுகிறது; இயக்கப் பெறுகிறது. உடம்பின் இயக்க ஆற்றலின் பாதுகாப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த உடம்பின் அனைத்துப் பொறிகளையும் புலன்களையும் சிறப்புற இயக்கிப் பயன் கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனுடையதாகிறது; முழுமையாகிறது.

இத்தகைய முழு வாழ்க்கைக்குத் தொடக்கம் இல்வாழ்க்கை, காதல் ஒருத்தியுடன் கூடி வாழ்க்கையை நடத்துதல் என்பது, ஒரு கூட்டு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் தென்புலத்தார் பேணப்படுகின்றனர்; தெய்வம் பூசிக்கப் பெறுகிறது; விருந்தோம்பும் வேளாண்மை நிகழ்கிறது; துறந்தவ்ர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் வழங்கப் பெறுகின்றன.

துய்த்து மகிழும் வாய்பிழந்தார்க்கெல்லாம் துய்ப்பன வழங்கப் பெறுகின்றன. இரந்தாருக்கும், இறந்தாருக்கும் ஏற்ப உதவிகள் செய்யப் பெறுகின்றன. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக, சமூக வாழ்க்கையாக, நாட்டு வாழ்க்கையாக வளர்கிறது! இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி! இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கை!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"

வானத்திற்கு என்று ஒரு தனிவாழ்க்கை முறை இல்லை. இந்த வையகத்தில் வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துபவர்களை நோக்கி வானகம் வந்துவிடும். வானத்தை இந்த மண்ணிலேயே காணலாம். இங்கேயே – இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம். வாழ்வாங்கு வாழ்தல் மூலம் மட்டுமே அமர வாழ்வு கிட்டும்! அறிவியல் சார்ந்த வாழ்க்கை வாழ்வோமாக! அறிவறிந்த ஆழ்வினை இயற்றுவோமாக! பொருள்களைச் செய்து குவித்து இன்பத்துடன் வாழ்வோமாக!

Add a comment


வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்ளவர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்கை – இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

சுந்தரர் இல்லறவியலில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது.இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே சுழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புற திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில்தான் பிறந்தது.

வள்ளுவம் மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக – இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் "பேய்" என்றும் "காதல், ஆண்டவனின் சாபம்" என்றும் கூறுவார். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை, மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்த பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஓர் அனுபவ வாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கை துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

ஒரு பெண் தன் துணைவருக்கு – பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழிநடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதால் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

என்று மொழிகிறது.

ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறை வேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான், தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்ய முடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள். இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் தற்காத்து ‘தற்காத்து’ என்றது குறள். அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும், புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது.மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக்கொள்வது; குடும்பத்தின் செய்திகள் அயலறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும்.

இத்தகு நலன்களுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம். இத்தகு நலன்கள் பெண்ணினத்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

Add a comment

மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. இதனைத் திருக்குறள்,
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற"

என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள், போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி, பலவற்றைப் பெற்றாலும் சரி, வாழ்க்கை முழுமை ஆகாது. அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.

ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட்பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமர நிலை எய்துகிறது. அதனாலேயே "பெருமவற்றுள் யாமறிவதில்லை" என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.

"அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற" என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தனவாக இல்லை. "அறிவறிந்த" என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்? அப்படியானால் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை யாருக்கு அடையாகச் சேர்ப்பது? அறிவறிந்த பெற்றோர்களா? அறிவறிந்த மக்களா? பெற்றோர்களுக்குத்தான் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை அடையாக்க வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். ஆம்! காதல் தூய்மையானது; அறிவார்ந்தது; உறவின் வழியது; தன்னல மறுப்புப் பண்பின் வழியது. காதல் மனையறம் ஒரு நோன்பு. இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் இயற்றுநர் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர். பெற்ற வண்ணம் வளர்த்து, உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆதலால் நன்மக்களை விரும்பும் பெற்றோர் "அறிவரிந்தவர்களாக" இருத்தல் வேண்டும்; வீட்டைப் பல்கலைக் கழகமாக்குபவர்களாய் இருத்தல் வேண்டும். கருவுற்ற காலம் முதல் பிறந்து வளர்ந்து தன் நிலை எய்தும் காலம் வரையில் பொறுப்போடு வளர்ப்பவர்கள். அறிவறிந்த பெற்றோர்கள் அறிந்த பெற்றோர்களாவர்.

அண்ணல் காந்தியடிகள், "சிறப்புப் பொருந்திய வீட்டுக்கு இணையான பல்கலைக்கழகம் இல்லை" என்று கூறியதை எண்ணுக. நல்ல பெற்றோர்களே குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள். அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆதம்ஸ், தன்னுடைய கடவுள் பக்தி – அறநெறி பற்று அனைத்துக்கும் தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார். மக்களாவதும் – மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப்பேயாம்.

ஆதலால், மனையறம் வாழ்வோர் – மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework