மனித வாழ்க்கைக்குச் சிறந்த அடக்கம் தேவை. பழங்காலத்தில் அடக்கம் என்ற ஒரே சொல் பல ஒழுகலாறுகளையும் வற்புறுத்தியது. இன்று அடக்கம் என்ற பண்பு விரிந்து தனித்தனியே குறியிட்டுச் சொல்கிற வகையில் அமைந்துள்ளது. பொதுவாக மற்றவர்களிடம் அகந்தையின்றி அடக்கமுடையவராக நடந்து கொள்ளும் பண்பு. ‘பணிவு’ என்ற பிறிதொரு சொல்லால் உணர்த்தப்படுகிறது. திருக்குறள்படி பணிவுடமையும் அடக்கமுடைமையிலேயே அடங்கியிருக்கிறது. அடுத்துத் தன்னடக்கம், நாவடக்கம், பொறிகள் அடக்கம், புலனடக்கம் என்றெல்லாம் சொல்லப் பெறுகின்றன.

மனிதன் அடைந்து ஒழுக வேண்டிய நற்பண்புகள் பலப்பல. அவற்றுள் தலையாயது தன்னல மறுப்பு. நீதியின்பால் வேட்கை, ஈகைக்குணம், அன்புடைமை இவையெல்லாம் சிறந்தனவாயினும் தன்னடக்கமில்லாது போனால், இந்தப் பண்புகள் சிறக்கா. ஆதலால் ஒழுக்கங்களுள் சிறந்தது, தலையாயது தன்னடக்கம். கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முதல்நிலைப் பண்புகளாகத் தன்னடக்கத்தையும் புலனடக்கத்தையும் கூறினான்.

தன்னடக்கம் என்ற சிறந்த பண்பினைப் பெற வேண்டுமாயின் மற்றவர்களிடம் குறை காணும் தீமை அறவே கூடாது. ஒரோ வழி குறை கண்டாலும் அதை இரகசியமாகக் கொண்டு பிறரிடம் கூறக்கூடாது. வீணான விவாதங்கள் அறவே கூடாது. கட்சி – பிரதி கட்சிச் சுழியில் சிக்கித் தவிக்காமல் என்றும் எப்பொழுதும் பொதுநிலை வகிக்க வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வு நினைவுகளை விட்டொழித்து விட்டால் அடக்கப்பண்பு வந்து விடும்.

பொதுவாகத் திருக்குறள் அடக்கமுடைமையையும் அதன் பயனையும் முதல் நான்கு குறள்களில் வகுத்து கூறுகின்றது. அடுத்து மற்றவர்களிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய பண்பை எடுத்துக் கூறுகிறது. செல்வமுடைமை அகந்தையை வளர்க்கும். ஆதலால், செல்வம் உடையார் பணிவுடையாராகவும் இருப்பின் இரண்டு மடங்கு செல்வம் பெற்றது போன்றது என்பது திருக்குறள் கருத்து.

அடுத்து, ஐம்பொறிகள், ஐம்புலன்களின் அடக்கத்தை எடுத்துக் கூறுகிறது. அடக்கமுடைமை என்ற பண்பின் தோற்றதிற்குரிய ஒழுகலாற்றை எடுத்துக் காட்டுகிறது, புலன்கள், ஆசைகள் தோன்றும் களம். ஆசைகள் தோன்றி வளர்ந்தால் அடக்கமுடைமையைப் பெறுதல் இயலாது. புலன்களில் ஆசைகள் தலைப்படின் அந்த ஆசைகளை அடையப் பொறிகளை இயக்கம் ஆன்மா, அப்போது பொறிகள் மதம் பிடித்தக் களிறுகளைப்போல் கட்டுப்பாடின்றிச் செயற்படும். இது தவறு. பெரும்பாலும் இச்சை, பொறி வாயிலாகச் செய்திகளாக, பொருள்களாகப் புலன்களுக்குச் செல்லும். புலன்கள், தாம் பொறி வாயிலாகப் பெற்ற செய்திகளை, பொருள்களை இச்சையாக மாற்றி மீண்டும் பொறிகளைத் தூண்டும் அவற்றை அடைந்து அனுபவிப்பதற்காக! ஆதலால், பொறிகளை கண்டபடி சுற்றவிடாமல் பாதுகாத்தல் பொறியடக்கம் புலனடக்கம் இரண்டும் ஒருங்கே வந்தணையும். இந்த உயரிய ஒழுகலாறு அமைய வேண்டுமானால் அழகுடையான எல்லாம் ஆராதனைக்கே உரியன, அனுபவிப்பதற்கு அல்ல என்ற கருத்தும் நல்லனவெல்லாம் மற்றவர்களுக்கே என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கதிற்குத் திருக்குறள் அற்புதமான ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அனுபவிக்கலாம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் ஒடுக்ககூடியான அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேணும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. குறள் – 126

அடுத்து நாவடக்கம் பற்றியும் மூன்று குறள்களில் பேசுகிறது. தீய சொற்களை அறவே விலக்கும்படி திருக்குறள் ஆணையிடுகிறது. இத்தகு அடக்கமுடைமையைச் சார்ந்த பண்புகள் வாழ்க்கையில் தங்கினால் வாழ்வு அறவாழ்வாக வளரும்.

Add a comment


ஒழுகுதல், ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று கணிக்கப்பெறும். ஒருவர் தனக்கும் தன்னோடு வாழும் மற்றவர்களுக்கும் கேடுகள் வாராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும்.

இப்பிறப்பு, சிறப்புடைய ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். தேர்வுகள் பல தடவை எழுதுவது போல, வாழ்க்கைத் தேர்வு பல தடவை எழுத இயாது; எழுத முடியாது. ஆதலால் வாய்த்த இந்தப் பிறப்பைப் பயனுறு வகையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயன் காண வேண்டும்.

ஒழுக்க நிலையில், தற்சார்பான ஒழுக்கம் முதல் நிலையினது. அதாவது ஒரு மனிதன் தன்னைத்தான் கொண்டொழுகுதல்; தன்னுடைய சுவைப் புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாவித நோய்களுக்கும், துன்பங்களுக்கும், தீமைகளுக்கும், அடிப்படைக் காரணம், சுவைநுகர்வின் பாற்பட்ட இழிவுத் தன்மையே! வளர்ந்து வரும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் ஆகியன மானிடரின் சுவைப் புலன்கள் கெட்டவழித் தோன்றும் நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மானுடத்தை மீட்கவேயாம். மானிடர் புலன்களின் மீது கவனம் செலுத்தித் தூய்மை காக்க வேண்டும்.

புலன்கள் தூய்மைக்குத் துணை செய்வது ஆசைகளிலிருந்து தப்பிப்பது. தேவையை அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத்தக்க ஆசை. புலன்களின் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும்,பொறிகள் மீது தனி ஆணை செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கதாலேயே எழுதப் பெறுகிறது.

அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணக்கும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை. ஆதலால், சமுதாய ஒழுக்கலாறுகள் கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கன, சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது. ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"

20:17 19/02/2014என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர் பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லா உயிர்களும் உயிர்க்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர்க்காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன்காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ் பெறுதல். இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி தூற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.

குடிமை – குடிமைப்பண்பு – Citizenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம். ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்"

அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (Secular) ஒழுக்கம். இரண்டாவது பல மொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை – ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள் – என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

Add a comment


பொறுமை – பொறுத்தாற்றுதல். பொறுமை பலவகை. துன்பம் வந்துற்றபோது பொறுத்துக் கொள்ளல், நோய் வந்தபோது பொறுத்துக் கொள்ளல், பிறர் கூறும் பழிச்சொற்களை பொறுத்துக் கொள்ளல், பிறர் செய்யும் ஊறினைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளல் என்று பல வகையாகப் பிரித்துணரலாம். ஆயினும் பொருதாற்றுதல் என்பது ஒரே பண்புதான். தன்னைச் சார்ந்து தன்னாலேயே உருவாக்கிக் கொள்ளப் பெற்ற துன்பங்களுக்கு காரணம் அவரவரே. இதனை அவர்கள் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடங்களில் பொறுமை இயற்கை. ஆனால் இந்த இடங்களில் கோபம் வந்தால் கூட ஒரே வழி வரவேற்கலாம். இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை – அறியாமை, வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம். இந்த வகையில் வரவேற்கத் தக்கதேயாம்.

ஆனால் பிறர் தன்னை இழித்துப் பேசியபொழுது, பிறர் தமக்குக் கொடிய துன்பங்களைச் செய்த பொழுது – உடலுக்கு ஊறு முதலியன செய்த பொழுதும் பொறுமையை மேற்கொள்ளல் அரிது. இந்த மாதிரித் தருணங்களில் பொறுமை காட்டலே பொறுமை எனப்படும். போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றுபவர்களிடம் பொறுமையாக இருத்தலே பொறையுடைமை. "பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்" என்றது கலித்தொகை. நாடவர் பழித்துரையைப் பூணாக ஏற்றுக் கொண்டாலே உய்தி பெறலாம் என்பது திருவாசகக் கருத்து. பண்புகளில் சிறந்தது பொறையுடைமை. அதே போழ்து பொறையுடைமைப் பண்பு ஆளுமையைச் சார்ந்து விளங்க வேண்டும். ஆளுமை இல்லாதவர்களிடம் உள்ள பொறையுடைமைப் பண்பு ஆகாது. இதற்குப் பெயர் கோழைத்தனம். நாட்டு மக்கள் பொறையுடைமையின் பெயரால் கோழைகளாகக் கூடாது. ஆளுமைப்பண்பு தழுவிய பொறையுடையவராய் இருத்தல் வேண்டும். இதுவே திருக்குறளின் கருத்து.

ஆடாது, அசையாது – கற்களாக உடைத்தாலும் பொறுமையாக இருக்கும் மலையைப் பொறுமைக்குச் சான்றாகத் திருக்குறள் கூறவில்லை. திருக்குறள் பொறையுடமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் கூறுகிறது. ஏன்? நிலம் உழப்படுகிறது. உழுவதன் மூலம் நிலத்திற்கு ஊறு செய்யப்படுகிறது. நிலம் மண்வெட்டி கொண்டு கொத்தப்ப்படுகிறது; வெட்டப்படுகிறது. நிலத்தின் பரப்பில் கீறல்கள், வெட்டுப் பள்ளங்கள் தோன்றுகின்றன. ஆயினும் நிலம் இத்துன்பங்கள் செய்தாரைச் சினப்பதில்லை; அவருக்குத் தீமை செய்வதில்லை. மாறாகத் தனக்குச் செய்யும் ஊறுகளையே ஆக்கமாக எடுத்துக் கொண்டு நிலம் செழுமையை அடைகிறது; வளம் கொழிக்கிறது. அந்த வளத்தினைத் தனக்குத் தீமை செய்த மனித குலத்திற்கே திரும்பத் தந்து விடுகிறது. அவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறது; உயர்த்துகிறது, மலைக்கு இந்த இயல்பில்லை. மற்றவர்கள் மலையைக் குடைந்து கல் உடைத்து எடுத்தால் மலை பொறுத்துக் கொள்வது உண்மை; ஆனால் தன்னை அழித்துக் கொள்கிறது; கல் உடைப்பவனுக்கும் நெடிய பயன் தருவதில்லை. ஆனால் உழப்பெறும் – கொத்தப்பெறும் நிலம் அழிவதில்லை. தனக்கு ஏற்பட்ட அழிவையே ஆக்கமாக மாற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது; வாழ்விக்கிறது; நிலையாக வாழ்விக்கிறது. அதுபோல் பொறுமைப் பண்பின் மூலம் ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும். பொறுத்தல் என்ற பண்பு ஆக்கத்தின் பாற்பட்டது. "பொறுமையும் சாந்தமும் ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுப்பன" என்றார் லேஹண்ட்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" (குறள் – 151)

Add a comment

மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலேயாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப் பெறுவன. தீய குணங்கள் தானே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புகளைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ்சிறப்புகளை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங்குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றவர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவார். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார்; நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் "பாவி" என்று கூறியது திருக்குறள்.

அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித்திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

அழுக்காறு – பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை. ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுகாற்றுக் குணமுடையவர்கள் ஒருபொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியோடு தொடர்புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம், களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறைபிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!

அறிவில் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!

Add a comment

ஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி. ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவுகோலாக அமையாது.

ஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர் சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பார். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.

தனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம். ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.

சமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தை சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும்; நல்லெண்ணம் வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

நாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில் – பலகோடி மக்கள் வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறிது ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமயம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலைகொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஒழுகலாறு என்பது நட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு. பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழுகலாறுகள் என்று சில, வளர்ந்து இடம் பெற்றுள்ளன. அத்தேசீய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப்படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீயஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"
என்றார் விவேகானந்தர். வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஆனால், ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமையாததுதான்! ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." (குறள் – 113)

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework