அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலேயாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப் பெறுவன. தீய குணங்கள் தானே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புகளைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ்சிறப்புகளை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங்குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றவர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவார். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார்; நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் "பாவி" என்று கூறியது திருக்குறள்.
அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித்திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.
அழுக்காறு – பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை. ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுகாற்றுக் குணமுடையவர்கள் ஒருபொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியோடு தொடர்புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம், களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறைபிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!
அறிவில் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!