பொறாமை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காறு நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத்தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி தூற்றுவர்.
அதனால் அழுகாறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக்காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!
"O Beware My Lord of Jealousy" என்று கூறுகிறார். "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். "Envy will sting it self to death" என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால் தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்" என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.
நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.
அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்கனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.
பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். (குறள் – 163)
அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.
அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.