இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதூற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!
பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, "தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை" என்றார் முகமது நபி.

நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப்பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அக்ழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளகூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" (குறள் – 151)

Add a comment

பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காறு நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத்தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி தூற்றுவர்.

அதனால் அழுகாறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக்காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!

"O Beware My Lord of Jealousy" என்று கூறுகிறார். "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். "Envy will sting it self to death" என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால் தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்" என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.
நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.

அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்கனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.

பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். (குறள் – 163)

அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.

அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.

Add a comment

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்" (குறள் – 171)

இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!

‘நடுவுநிலை’ என்பது ஓர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்ஙனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான்!

ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது, சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது.

உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை! உண்ணும் உரிமை!

"நன்பொருள்" – பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் ‘நன்பொருள்’ என்றார்.

ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைபாற்றல் விலை மதிப்புடையது, மாறாத் தன்மையுடையது; ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள் கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.

அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய்விடும்! அப்புறம்?

வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு! நலவாழ்வு!

Add a comment

இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது, உலகியற்கையில் காணப்பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.

மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக் கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.
ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். ‘மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!" என்றார் குவாரல்ஸ்.

"Scandal breeds hatred; hatred begets division" – Quarles

ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்க வேண்டும். நல்ல நட்பைத் தேடிக்கொடுத்து விட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவார்.

ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாகி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள். வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக்கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும்கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.

ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!

"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்" (குறள் – 187)

Add a comment

நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு. பல சமயங்களில் பன்முக நிலையில்கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.

எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ள வேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.

இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன. இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.

ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.

பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடைப்போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்துத் துலாக்கோலைச் சமநிலையில் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல் நபர்கள் ஆராயப்படுகின்றனர்.

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி." (குறள் – 118) என்பது திருக்குறள்.

"சமன்செய்து", என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரிதிருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக்கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள் – பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், "கோடாமை" என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின்பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்: அறநெறியை வளர்க்கும்.

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework