வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்ளவர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்கை – இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

சுந்தரர் இல்லறவியலில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது.இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே சுழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புற திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில்தான் பிறந்தது.

வள்ளுவம் மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக – இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் "பேய்" என்றும் "காதல், ஆண்டவனின் சாபம்" என்றும் கூறுவார். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை, மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்த பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஓர் அனுபவ வாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கை துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

ஒரு பெண் தன் துணைவருக்கு – பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழிநடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதால் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

என்று மொழிகிறது.

ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறை வேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான், தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்ய முடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள். இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் தற்காத்து ‘தற்காத்து’ என்றது குறள். அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும், புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது.மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக்கொள்வது; குடும்பத்தின் செய்திகள் அயலறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும்.

இத்தகு நலன்களுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம். இத்தகு நலன்கள் பெண்ணினத்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப் பெறுதல் வேண்டும்.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework