கடவுள் எல்லையற்ற பொருள்; ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். தண்ணீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால், திருவள்ளுவர் "நீரின்றியமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத – நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல, பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" – என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புள் அல்ல, முளைத்தெழும் புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மைனர் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மணற்பரப்பு ஆழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

"விசும்பின் துளிவீழின் அல்லாமற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது"

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம். இளங்கோவடிகளும்

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுது" என்று வாழ்த்தினார்.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework