வாழும் மனிதர்களில் யாருக்குத்தான் தற்காப்பு உணர்வு இல்லை! நூற்றுக்கு நூறு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்புபவர்கள் தாம்! ஆனால் வாழ்வியலறிவு பெறாததால் பலர் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பின்மையையே பெறுகிறார்கள்.

பலர் எவற்றைப் பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அவையே அவர்களுக்குப் பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்து விடுவதை வாழ்க்கைப் போக்கில் காணலாம். சொத்து, பெருமை, புகழ் ஆகியன பாதுகாப்பு என்று தேடினாலும் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும்போது அவை பாதுகாப்பு தருவதில்லை.

தான் நினைத்தவாறு நடக்காதபோது மனிதனுக்குக் கோபம் வருகிறது. கோபம் வெகுளி என்றும் கூறப்படும். கோபம் வந்தால் இதயத் துடிப்புக் கூடுகிறது; இரத்த ஓட்டம் கூடுகிறது. அது மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. இதனால் இதயப் பாதிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; உடல் நலம் கெடுகிறது. உடல் நலக் கேட்டின் வழி மன நலம் கெடுகிறது.

உடலும் மனமும் கெட்டால் அறிவு வேலை செய்யுமா? ஒரு போதும் செய்யாது, ஆதலால் கோபம் எதையோ காப்பாற்றிக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தோன்றுவது போலத் தெரிகிறது. ஆனால் அது உண்மையன்று. கோபத்தினால் இழப்பே ஏற்படுகிறது.

கோபப்படுவதற்கு மாறாகத் திகைப்பும் படபடப்பும் அச்சமும் இல்லாமலிருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. எல்லாம் நன்றாக நடக்கும்; பாதுகாப்பும் இருக்கும். அடக்கப்பட்ட கோபம் ஆற்றலாக மாறும்! பொறுப்புணர்ச்சியைக் கூட்டும்! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு!

சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றன. பல ஆண்டுகள் வாழலாம். நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் கோபத்தை அடக்குதல் எளிதன்று? கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் காத்திருக்க வேண்டும்.

கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியதுதான்! பிளேட்டோவைப் போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மௌனமாக இருக்கக் கற்றுக் கொள்வோம்! கோபத்தை வென்றுவிடலாம்.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" (திருக்குறள் – 305)

தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக!

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework