அன்பு ஈனும் ஆர்வம்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. "ஆற்றல் மிக்க அன்பு" என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.
இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். "ஒத்தறிவான்" என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.
ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.
தூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. "அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி" என்பது சேக்கிழார் திருவாக்கு.
ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.
நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் "சிறப்பு" என்று சிறப்பித்துக் கூறுகிறார். "சிறப்பு" என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!
"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு" (திருக்குறள் – 74)
இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.
அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.