ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (திருக்குறள் – 314) என்பது குறள்.

பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

ஆதலால் திருவள்ளுவர் "இன்னா செய்தாரை ஒறுத்தல்" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? "தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!" என்று வள்ளுவர் கூறுகின்றார்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.

"இன்னா செய்தாரை ஒறுத்தல்" – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். "அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது" பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

"எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்". இது எளிய வாழ்வியல் உண்மை.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework