ராகம்: பூபாளம்
தாளம்: ஆதி
ஆ - ஸரிகபதஸ
அ - ஸ்தபகரிஸ

பல்லவி

முன் செய்த தவப்பயனே! - எங்கள் -
முக்தி தரும் மாதவனைப் - பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)

அனுபல்லவி

முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! - இப்போ
மூவுலகும் வாழக் - கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே - புள்ளின் வாய் பிளந்தோன்! - சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு - எல்லா உலகாள - வல்லானிவனைப் பாட-
       வாயாறத் தோனூற (முன் செய்த)

சரணம்

நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை - நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து - மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!

1. ஞானமெனும் - ஆயர்வாழ் மனையில் வந்து - ,
தானுமுறவாகும் - தன்மையது சொல்லி (நினைந்தாலும்)

2. ஆடுவர் - ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)

3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)

4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் - பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் - பொங்கு குறு நகையும் - மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)

5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
   பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)

6. எனையாளும் - ஈரெழு உலகாளும் - அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் - கண்ணனை
முனைந்தோடும் - யமுனைத்துறைவனை - எவ்வுயிர்க்கும்-
இறைவனே - என் மன நிறைவோனைப் - பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)

Add a comment


ராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸா
அ - ஸ்தபதமகரிஸா

பல்லவி
வர மொன்று தந்தருள் வாய்! - வடிவேலா!
வர மொன்று தந்தருள் வாய்! - எங்கள்
மரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா! (வரமொன்று)

அனுபல்லவி
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - பரத்தில்
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - இளம்-
-பச்சைக்கு மிச்சைக்கும் - நடுப் பொருளே!
பலபொருள் கேட்டுனை அது இது எனாது-
-பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன்! அந்த (வரமொன்று)

சரணம்

பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை-
-புளித்துப் புளித்துப் போச்சே! ஏனென்றால் உந்தன்
புன்னகை முகம் - கண்டதால் ஆச்சே!

இன்னும் உலகமுறும் இன்பம்" என்றவை-
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்
உன் ஏறுமயில் நடம் கண்டதா லாச்சே!

முன்னும் மனமுருக - முருகா! முருகா" என்று
மோஹமீறித் தலை சுற்றலாச்சே! - சொல்ல வந்த
மொழி கூட மறந்துதான் போச்சே!

"பொன்னார் மேனியன்" காதில் சொன்னாயே (ஏதோ) - அந்தரங்கம் -
போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே!

மத்யம காலம்

புனிதமான அறுபடை வீடுடையாய்! - புகு மதக் களிறு நடையுடையாய்
இனித்தநறு வைங்கலவை யதனினும் - இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்குமொரு பதம் தந்தருள -மண -மணக்க வருதமிழருளுடையாய்!
அன்னை யினும் சிறந்ததான - அருளொடு நிறைந்த தான - அறுமுக! வடிவேலா! (வர)

Add a comment

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸ்
அ - ஸ்நிதபமகரிஸ்

பல்லவி

வாங்கும் எனக்கு இருகை (முருகா) ஆனால் அருளை
வழங்கு முனக்கு பன்னிருகை எங்கள்
வடிவேலா நீல மயிலேறும் தணிகை வளர் முருகா (வாங்கும்)

அனுபல்லவி

தாங்கும் புகழுடைய தணிகை மலைக்கதிபா
தகுமோ ஒரு கோடி செங்கை தந்தாலும் அதிகமாகுமோ முருகா

சரணம்

ஒன்றை இரக்க வந்தால் ஒன்பதோ முருகா
உன்னருளை நான் என்னென்பதோ - என்
புன்மொழி உன் செவிக்கு உகந்ததோ
திருப்புகழினைக் கேட்டு மனம் கனிந்ததோ முருகா (வாங்கும்)

Add a comment

ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிஸ்
அ - ஸ்நிபமகரிஸ

பல்லவி

வந்தே பிறந்தான்! - கண்ணன் வந்தே பிறந்தான் - மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)

அனுபல்லவி

மந்தமாருதம் மெல்லெனவீச - வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் - சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)

சரணம்

1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க -
மற்றவை சங்க சக்கரம் ஏற்க -
தலையை நீட்டி - வசுதேவனும் பார்க்க - அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)

2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை -
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி - ஜாதகம் கணிப்பாரும் இல்லை - எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)

3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க -
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)

Add a comment

ராகம்: நாதநாமகரிய
தாளம்: தி.திரிபுட
ஆ - ஸரிகமபதநி
அ - நிதபமகரிஸநி

பல்லவி

வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண

அனுபல்லவி

செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்

ஜதி

தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework