ராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸா
அ - ஸ்தபதமகரிஸா

பல்லவி
வர மொன்று தந்தருள் வாய்! - வடிவேலா!
வர மொன்று தந்தருள் வாய்! - எங்கள்
மரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா! (வரமொன்று)

அனுபல்லவி
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - பரத்தில்
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - இளம்-
-பச்சைக்கு மிச்சைக்கும் - நடுப் பொருளே!
பலபொருள் கேட்டுனை அது இது எனாது-
-பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன்! அந்த (வரமொன்று)

சரணம்

பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை-
-புளித்துப் புளித்துப் போச்சே! ஏனென்றால் உந்தன்
புன்னகை முகம் - கண்டதால் ஆச்சே!

இன்னும் உலகமுறும் இன்பம்" என்றவை-
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்
உன் ஏறுமயில் நடம் கண்டதா லாச்சே!

முன்னும் மனமுருக - முருகா! முருகா" என்று
மோஹமீறித் தலை சுற்றலாச்சே! - சொல்ல வந்த
மொழி கூட மறந்துதான் போச்சே!

"பொன்னார் மேனியன்" காதில் சொன்னாயே (ஏதோ) - அந்தரங்கம் -
போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே!

மத்யம காலம்

புனிதமான அறுபடை வீடுடையாய்! - புகு மதக் களிறு நடையுடையாய்
இனித்தநறு வைங்கலவை யதனினும் - இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்குமொரு பதம் தந்தருள -மண -மணக்க வருதமிழருளுடையாய்!
அன்னை யினும் சிறந்ததான - அருளொடு நிறைந்த தான - அறுமுக! வடிவேலா! (வர)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework