ராகம்: பூபாளம்
தாளம்: ஆதி
ஆ - ஸரிகபதஸ
அ - ஸ்தபகரிஸ

பல்லவி

முன் செய்த தவப்பயனே! - எங்கள் -
முக்தி தரும் மாதவனைப் - பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)

அனுபல்லவி

முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! - இப்போ
மூவுலகும் வாழக் - கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே - புள்ளின் வாய் பிளந்தோன்! - சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு - எல்லா உலகாள - வல்லானிவனைப் பாட-
       வாயாறத் தோனூற (முன் செய்த)

சரணம்

நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை - நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து - மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!

1. ஞானமெனும் - ஆயர்வாழ் மனையில் வந்து - ,
தானுமுறவாகும் - தன்மையது சொல்லி (நினைந்தாலும்)

2. ஆடுவர் - ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)

3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)

4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் - பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் - பொங்கு குறு நகையும் - மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)

5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
   பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)

6. எனையாளும் - ஈரெழு உலகாளும் - அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் - கண்ணனை
முனைந்தோடும் - யமுனைத்துறைவனை - எவ்வுயிர்க்கும்-
இறைவனே - என் மன நிறைவோனைப் - பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework