- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பிஒருகால் ஊர்திப் பருதிஅம் செல்வன்
குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
தண்சேற்று அடைஇய கணைக்கால் நெய்தல்
நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப 5
வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும்புலம் பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றுஇழி களிற்றின் குவவுமணல் நந்தி
இரவின் வம்மோ- உரவுநீர்ச் சேர்ப்ப!- 15
இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும்பொழில் செய்தநம் குறியே
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
பனிவார் உண்கணும் பசந்த தோளும்நனிபிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம்பண்பு அறியார்
நீடினர் மன்னோ காதலர்' எனநீ
எவன்கை யற்றனை?- இகுளை!- அவரே 5
வான வரம்பன் வெளியத்து அன்னநம்
மாணலம் தம்மொடு கொண்டனர்- முனாஅது
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு
வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை 5
சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும்
பொய்யா நல்லிசை மாவண் புல்லி
கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை
அருவித் துவலையொடு மயங்கும்
பெருவரை அத்தம் இயங்கி யோரே!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்தவான்முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி
வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து 5
புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி
பயில்இருங் கானத்து வழங்கல் செல்லாது
பெருங்களிற்று இனநிரை கைதொடூஉப் பெயரும்
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழநின் 10
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை
அடைஇறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
காலொடு துயல்வந் தன்னநின்
ஆய்இதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்காமர் பீலி ஆய்மயில் தோகை
இன்தீம் குரல துவன்றி மென்சீர்
ஆடுதகை எழில்நலம் கடுப்பக் கூடி
கண்ணேர் இதழ தண்நறுங் குவளை . 5
குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை
நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு
இன்னை ஆகிய நின்நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின், அன்னோ! 10
என்னென உரைக்கோ யானே- துன்னிய
பெருவரை இழிதரும் நெடுவெள் அருவி
ஓடை யானை உயர்மிசை எடுத்த
ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
கோடுயர் வெற்பன் உறீஇய நோயே?
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறைஉகுவார் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கண் கிணையின் பிறழும் ஊரன்
இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென் 5
பொற்றெடி முன்கை பற்றின னாக
'அன்னாய்!' என்றனென் அவன்கைவிட் டனனே
தொன்னசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினே னாகி மற்றுது 10
செப்பலென் மன்னால் யாய்க்கே நல்தேர்க்
கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளா னாகவும் ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப அதாஅன்று 15
ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலைபழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி!- என்னைநின் குறிப்பே?