91. இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போல் பொ஢துவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு

92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.

94. இம்மி யா஢சித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து)
அடாஅ அடுப்பி னவர்.

95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.

96. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங்கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப.
என்னை உலகுய்யு மாறு.

98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது
ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.

99. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.

100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படும் சொல்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework