பழவினை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு)இட்டு
நின்றுவீழ்ந் தக்க(து) உடைத்து.
103. வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மா
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப
செய்த வினையான் வரும்.
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய விழைபயன் நல்லவை
வேண்டினும் வேண்டா விடினும் உற்றபால
தீண்டா விடுதல் அது.
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் துற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பாவூ.