ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சுதப
அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் 5
நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை
கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவுநாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி 10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து
செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனைஅரண் கடந்த வினைவல் தானைத்
தேனிமிர் நறுந்தார் வானவன் உடற்றிய 15
ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்
பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுயிர்த்து
வருந்தும்கொல்? அளியள் தானே!- சுரும்புண
நெடுநீர் பயந்த நிரைஇதழ்க் குவளை
எதிர்மலர் இணைப்போது அன்னதன்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework