விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
நாம்செல விழைந்தன மாக' ஓங்குபுகழ்க்
கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை 5
நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழில் குன்றத்துக்
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின்னாள் கழிக! என்று முன்னாள் 10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்
மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப
உறைகழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த 15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச்
செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்
காடுகவின் பெறுக- தோழி- ஆடுவளிக்கு
ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்
கல்கண் சீக்கும் அத்தம்
அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework