நகைநன்று அம்ம தானே- இறைமிசைமாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல்குறித்துக்
கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர் 5
காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் 10
பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர-
யாம்அது பேணின்றோ இலமே- நீ நின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந்து இயம்ப
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி 15
எம்மனை வாரா யாகி முன்னாள்
நும்மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள்- நெடுந்தேர்
இழையணி யானைப் பழையன் மாறன்
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல்அமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்பன் உவகையிற் பெரிதே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework