தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்றுமுளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர்- தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு.
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப-
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி-
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத்,
துறையும், ஆலமும், தொல் வலி மராஅமும்,
முறை உளி பராஅய்ப், பாய்ந்தனர் தொழூஉ.
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி,
விடர் இயம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்,
குடர் சொரியக் குத்திக், குலைப்பதன் தோற்றம் காண்-
படர் அணி அந்திப், பசும் கண் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டுக்
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்!
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்-
ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!
என ஆங்கு;
அணி மாலைக் கேள்வன் தரூஉமார், ஆயர்
மணி மாலை ஊதும் குழல்.
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின், படாஅகை
ஈன்றன ஆய மகள் தோள்.
பகலிடக் கண்ணியன், பைதல் குழலன்,
சுவல் மிசைக் கோல் அசைத்த கையன், அயலது,
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்.
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆன் உள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒரு நாள்,
கேளாளன் ஆகாமை இல்லை; அவன் கண்டு
வேளாண்மை செய்தன கண்.
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார், பொதுவரொடு,
எல்லாம் புணர் குறி கொண்டு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework