ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக்
காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தால் மறு இன்றி, வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!
'ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!
'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்-
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!
'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்-
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!
ஆங்கு;
தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால் கொடிது' என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework