(பள்ளர் களியாட்டம்)

ராகம் - வராளி தாளம் - ஆதி

பல்லவி

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு)

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)

Add a comment

(தன் சைனியத்திற்குக் கூறியது)

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

வானுறு தேவர் மணியுல கடைவோம்,
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.

Add a comment



(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு
ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது)

நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு
மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு

தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு
பாத்திர மாவாயோ? (தொண்டு)

ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)

அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணு தலொழித் தாயோ? (தொண்டு)

கப்ப லேறு வாயோ? - அடிமை
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு)

ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
உடல்பில் வலிமை யுண்டோ ?
வெற்று ரைபே சாதே! அடிமை!
வீரியம் அறி வாயோ? (தொண்டு)

சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு)

வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித் தாயோ?
உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு)

நாடு காப்ப தற்கே - உனக்கு
ஞானம் சிறது முண்டோ ?
வீடு காக்கப் போடா! - அடிமை
வேலை செய்யப் போடா! (தொண்டு)

சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பு வாயோ?
ஈன மான தொழிலே - உங்களுக்கு
இசைவ தாகும் போடா! (தொண்டு)

Add a comment

(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான்
கண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டைத்
திரித்துப் பாடியது)

களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ?

Add a comment



(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார்
சொல்லுதல்)

"ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு

பல்லவி

ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ? சொல்லும்

கண்ணிகள்

முன்னறி யாப் புது வழக்கம் நீர்
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
எந்நகரிலு மிது முழக்கம் - மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)

சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework