நாம் என்ன செய்வோம்
- விவரங்கள்
- சி. சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப்
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம்" என்றவர்ணமெட்டு)
ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம்
பல்லவி
நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்)
சரணங்கள்
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்)
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்,
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்,
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)
பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)
சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)