பாரத தேவியின் அடிமை
- விவரங்கள்
- சி. சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன்
அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும்
பின்பற்றி எழுதியது)
பல்லவி
அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே.
சரணங்கள்
மன்னிய புகழ் பாரத தேவி
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்)
வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்)
காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்)
காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)