வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- விவரங்கள்
- சி. சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய், கனல் மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய், - எமை தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய், - சட்டம் மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய், - புன்மை போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய், - புகழ் வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய், - விதை தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி)
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)