பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

Add a comment


(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின்
பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும்
வழங்கப் பட்டிருக்கின்றன)

(காப்பு)

வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்
நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம்
சிவரத்தன மைந்தன் திறம்.

(வெண்பா)

திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்.

(கட்டளை கலித்துறை)

காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
கும்பிட்டுக் கம்பனமுற்
றோலிமிட்டோ டி மறைந்தொழி
வான், பகை யொன்றுளதோ?
நீலக் கடலொத்fத கோலத்தி
ளாள்மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கோf பாலமிட்
டாள்அன்னை காற்படினே.

(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.

(ஆசிரியப்பா)

வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்
குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர்,
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்

பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்

சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே

தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர் தம்

செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
(வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! )

(தரவு கொச்சக் கலிப்பா)

ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம்
வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.

(வஞ்சி விருத்தம்)

திண்ணங் காணீர்! பச்சை
வண்ணன் பாதத் தாணை
எண்ணம் கெடுதல் வேண்டா!
திண்ணம் விடுதலை திண்ணம்.

(கலிப்பா)

விடுத லைபெறு வீர்வரை வாநீர்
வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்?
சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை
எடுமி னோஅறப் போரினை என்றான்
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!

(அறுசீர் விருத்தம்)

காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி
போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்
மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே

(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)

கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்
பாரத தேவியே கனல்கால்
இணைவழி வால வாயமாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே
துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.-

Add a comment


(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

Add a comment


நாமம் (காம்போதி)

பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.

நாடு (வசந்தா)

தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.

நகர் (மணிரங்கு)

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

ஆறு (சுருட்டி)

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மலை (கானடா)

சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.

ஊர்தி (தன்யாசி)

சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்.

படை (முகாரி)

கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர்
மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.

முரசு (செஞ்சுருட்டி)

ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.

தார் (பிலகரி)

வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.

கொடி (கேதாரம்)

கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.

Add a comment


நொண்டிச் சிந்து

நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework