பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
- விவரங்கள்
- சி. சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!
புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!