அறத்தினால் வீழ்ந்து விட்டாய்,
அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்வாய்,
முறத்தினால் புலியைத் தாக்க்ம்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினான் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்!

வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்,
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையைக் காத்து நின்றாய்.

மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
மதங்ப்பிலாப் பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்.
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆசனத்தைச் செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய்!

வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கித் தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்
பாரத்தை எளிதாக் கொண்டாய்,
பாம்பினைப் புழுவே யென்றாய்
நேரத்தே பகைவன் தன்னை
எநில்எலென முனைந்து நின்றாய்.

துணிவினால் வீழ்ந்து விட்டாய்!
தொகையிலாப் படைக ளோடும்
பிணிவலர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்,
பதுங்குதல் பயனென் றெண்ணாய்
தணிவதை நினைக்க மாட்டாய்,
நில் லெனத் தடுத்தல் செய்தாய்.

வெருளுத லறிவென் றெண்ணாய,
விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்,
சுருளலை வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை,
உருளுக தலைகள் மானம்
ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய்.

யாருக்கே பகையென் றாலும்
யார் மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்திர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய்.

வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பர்,
ஆள்வினை செய்யும் போதில்,
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.

விளக்கொளி மழுங்கிப் போக
வெயிலொளி தோன்றும் மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
கனக மாளிகையு முண்டாம்,
அளக்கருந் தீதுற் றாலும்
அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்,
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?

Add a comment


(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்,
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த
தோங்கினவே அந்த நாட்டில்.

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை,
பிணிகள் பலவுண்டு பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே யிறப்ப துண்டு,
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே
ஆவிகெட முடிவ துண்டு.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்
வனவாசம், இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்ஈ முடிந்தான் காலன்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!


குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்,
இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

Add a comment


ஹரிகாம்போதி ஜன்யம்

ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு

பல்லவி

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework