ரோடு எல்லாம் கொழுத் தாடை
ரொம்பிக் கிடக்குதுபார் -ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார். 1

நல்ல கரும்பு சட்டுக் கட்டா
நயமா விக்குதுபார் -ராசாத்தி
நயமா விக்குதுபார். 2

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
சந்தெல்லாம் விக்குதுபார் -ராசாத்தி
சந்தெல்லாம் விக்குதுபார். 3

கல்லுக் கண்டும் கடலை அவலும்
கணக்காய் விக்குதுபார் -ராசாத்தி
கணக்காய் விக்குதுபார். 4

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
குறுக்கே போறதைப்பார் -ராசாத்தி
குறுக்கே போறதைப்பார். 5

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
நின்று பாக்றதைப்பார் -ராசாத்தி
நின்று பாக்றதைப்பார். 6
நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
நொண்டி அடிக்குதுபார் -ராசாத்தி
நொண்டி அடிக்குதுபார். 7

பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள்
பட்டம் விடுவதுபார் -ராசாத்தி
பட்டம் விடுவதுபார். 8

சாரட்டு வண்டியும் சட்கா வண்டியும்
சரியா நிக்குதுபார் -ராசாத்தி
சரியா நிக்குதுபார். 9

மல்லுக் கட்டுற மைனர் மார்கள்
மாத்தி மாத்தி வாராங்க -ராசாத்தி
மாத்தி மாத்தி வாராங்க. 10

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework