செம்பிலே சிலைஎழுதி -மாமா
செல்வத்திலே நான் பிறந்தேன்
வம்பிலேதான் கைகொடுத்து -மாமா
வார்த்தைக் கிடம்ஆனேனே 1

கண்டி கொளும்பும்கண்டேன் -சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் -சாமி
ஒயிலாளைக் காணலையே 2

ஏழுமலைக் கந்தப்பக்கம் -சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம்
கண்சிவந்து வந்ததென்ன -சாமி
கடுங்கோபம் ஆனதென்ன? 3

மூக்குத்தித் தொங்கலிலே -குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி -குட்டி
அதிலேஒரு பச்சைக்கல்லு. 4

சந்தனம் உரசுங்கல்லு -குட்டி
தலைவாசலைக் காக்குங்கல்லு
மீன்உரசுங் கல்லுக்கடி -குட்டி
வீணாசைப் பட்டாயோடி. 5

ஆசைக்கு மயிர்வளர்த்து -மாமா
அழகுக்கொரு கொண்டைபோட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் -மாமா
சோறாக்க ஆளானேனே 6

வெள்ளைவெள்ளை நிலாவே -சாமி
வெளiச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ -சாமி
கருக்கவிட்டால் ஆகாதோ? 7

கும்பகோணம் ரெயிலுவண்டி -குட்டி
குடிகெடுத்த தஞ்சாவூரு
தஞ்சாவூரு தாசிப்பொண்ணு -குட்டி
தாயைமறக் கடிச்சாளடி. 8

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே -குட்டி
வெறகொடிக்கப் போறபொண்ணே
கட்டைஉன்னைத் தடுத்திடாதா -குட்டி
கரடிபுலி தாவிடதா? 9

ஆத்திலே தலைமுழுகி -குட்டி
ஆயிரங்கால் பட்டுடுத்தி
ஊத்துப்பக்கம் உட்காந்துநீ -குட்டி
போட்டுக்கோடி வெற்றிலையை. 10

கொக்குப் பறக்குதடி -குட்டி
கோணல்வாய்க்கால் மூலையிலே
பக்கத்திலே உட்கார்ந்துநீ -என்னைப்
பதறவிட்டுப் போனோயேடி. 11

காப்புக் கலகலென்னைக் -குட்டி
கைவளையல் ரெண்டும்மின்ன
மூக்குத்தி வேறேமின்னக் -குட்டி
முகமுங்கூட மின்னுதடி. 12

வண்டியும் வருகுதடி -குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி -குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே. 13

காளைநல்ல கறுப்புக்காளை -குட்டி
கண்ணாடி மயிலைக்காளை
சூடுவச்ச வெள்ளைக்காளை -குட்டி
சுத்துதடி மத்தியானம். 14

ஆறுசக்கரம் நூறுவண்டி -குட்டி
அழகால ரெயிலுவண்டி
மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி
மாயமாத்தான் ஓடுதடி. 15

பூத்தமரம் பூக்காதடி -குட்டி
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் -என்
காதடைப்பும் தீராதடி. 16

செக்கச் சிவந்திருப்பாள் -குட்டி
செட்டிமகள் போலிருப்பாள்
லாரி முடிஞ்சிருப்பாள் -குட்டி
வந்திருப்பாள் சந்தைக்கடை. 17

முட்டாயி தேங்குலழு -குட்டி
முறுக்குலட்டுப் பூந்திவடை
தட்டாமே வாங்கித்தரேன் -குட்டி
தங்கமே நீ வாய்திறந்தால். 18

பாசம் பிடிக்கும்தண்ணி -குட்டி
பலபேர் எடுக்கும்தண்ணி
அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி
அத்தனையும் முத்தல்லவோ? 19

நீட்டினகால் மடக்காமல் நீ-அடி
நெடுமுக்காடை எடுக்காமலே
காட்டினாயே கருமூஞ்சியை-அடி
கருங்கழுதை மூஞ்சிபோலே. 20 

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework