331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

333. குலந்தவம் கல்வி குடிநம்முப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

334. கன்னனி நல்ல கடையாய மாக்களின்
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலேன்
றுற்றவர்க்குத் தாமுதவ லான்.

335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து.

336. தங்கள் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும் - யாதும்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இசைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.

339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework