வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்சில்சுணங்கு அணிந்த பல்பூண் மென்முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை 10
இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம்நிறை பண்டத்துப் பொறைஅசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று 15
உள்ளினை- வாழிஎன் நெஞ்சே- கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்தநீயே