குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறைகலுழ்ந் தமையின் 5
தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அம்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை அயரும்
தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன் 10
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர்போல் சேறல் 15
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே வரினே வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின், வென்வேல்
மாரி யம்பின் மழைத்தோற் சோழர் 20
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework