கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்றநெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு 5
இவளும் பெரும்பே துற்றனள் ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்
குன்றின் தோன்றும் குவவுமணற் சேர்ப்ப! 10
இன்றிவண் விரும்பா தீமோ! சென்றப்
பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
கூஉம்கண் ணஃதே தெய்ய- ஆங்கண்
உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 15
உருமிசைப் புணரி யுடைதரும்
பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework