தோள்புலம்பு அகலத் துஞ்சி நம்மொடுநாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச், சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் - கறுத்தோர் . 5
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ - தோழி !- சேண்ஓங்கு 10
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து 15
வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை 20
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework