வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
வானம் வேண்டா வறனில் வாழ்க்கைநோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
இருங்கயம் துளங்கக், கால்உறு தொறும் 5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே: நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட, 10
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் 15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே: உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே