இலமலர் அன்ன அம்செந் நாவிற்புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்எக் 10
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய, 15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து. 20
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்:
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework