இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்,
மின்னி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக்,
குரும்பி, கெண்டும் பெருங்கை ஏற்றை 5
இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அருமர பினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க,
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, 10
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர்உயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறுநெறி,
அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் 20
ஆனா அரும்படர் செய்த
யானே, தோழி, தவறுஉடை யேனே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework